Friday, March 26, 2010

அரசு நிறுவனமும் 1500 கோடி வரி ஏய்ப்பும்!

... என்னத்தங்க சொல்றது? ஒரு பக்கம் வரி கட்டியே சம்பளத்துல பாதி வருவாயை தொலைத்துக்கொண்டிருக்கும் மென்பொருள் பொறியியல் வல்லுனர்கள்!

இன்னொரு பக்கம், வரி கட்டுங்கள்னு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பன்னிட்டு, வரி கட்டாம, வருமான வரித்துறையினர் சோதனையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் சினிமாக் காரங்க.

தேர்தல் வரும்போது, என்னுடைய வருமானம் 10 கோடி, 100 கோடி, 1000 கோடி என்று சொன்னாலும், அவர்கள் என்றைக்காவது வரி கட்டினார்களா என்று கேட்க முடியாத இடத்தில் இருக்கும் அரசியல் வாதிகள்... வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள்.

2 நாளைக்கு முன்னாடி, பெங்களூர் உயர்நீதி மன்றத்துல ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதப்பத்திதாங்க இப்போ பேசப் போறோம்.

எச். ஏ. எல் (HAL - Hindustan Aeronautical Limited) என்ற நிறுவனம் 2005 ம் ஆண்டு வரைக்கும் கட்ட வேண்டிய வணிக வரி ரூ. 1553 கோடியை கட்டவில்லை. கர்நாடக அரசு, அந்நிறுவனத்திற்குப் பிறப்பித்த ஆணையில், வரியை உடனே கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதை எதிர்த்து, அந்நிறுவனத்தின் சார்பில், பெங்களூர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பையும் எதிர்த்து, மேல் முறையீடு செய்தனர் அந்நிறுவனத்தினர். மேல்முறையீட்டுக்கான காரணம்: இது ஒரு அரசு நிறுவனம் என்றும், இங்கு அரசுக்காக பணிகள் நடப்பதாகவும், அதனால் வரி விலக்கு அளிக்க வேண்டுமென்றும் கோரியது.

ஆனால், உண்மையில், அரசுக்கு செய்யும் சேவையை விட, தனியாருக்குதான் அதிகமான, தரமான சேவை செய்ததாகவும், ஆகையால், இந்நிறுவனம், வரி விலக்குக்கு தகுதியற்றது என்றும் நீதிமன்றம் கருதி, மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்து, உரிய வரியை இன்னும் ஒரு வார காலத்தில் கட்டவேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

என்னோட மண்டைக்கு புரியாத ஒன்று என்னவென்றால், 2005 வரைக்கும் கட்ட வேண்டிய ரூ. 1500 கோடி என்னவானது? ஏன் கட்ட மறுக்கின்றனர்.

அரசு நிறுவனம் என்பதால், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தில் கூட யாரேனும் "கை" வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.

தினசரி, அமெரிக்க கலாச்சாரத்தைப் படிக்கவும், அதை செய்முறை செய்து பார்க்கவுமே (உச்ச நீதிமன்றமே, குற்றமில்லைனு சொல்லிடிச்சு! ) நேரமில்லாமல் போன நமக்கு... இதையெல்லாம் பற்றி சிந்திக்க நேரமேது? காலத்தின் கட்டாயம் நாம் கண்டிப்பாக எதையோ இழந்து வருகின்றோம் என்ற அச்சம் மட்டுமே மிஞ்சி காணப்படுகின்றது.

நன்றி: தினத்தந்தி

யார் குற்றம் என்ற பகுதியில் அடுத்து சந்திக்கலாம்.

No comments:

Post a Comment