Wednesday, April 7, 2010

மதமும்! மாற்றமும்!

"எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா?" ன்னு என் வீட்டுக்காரி கேட்டாலும் என்னால முடியல...

சரி, எவ்வளவோ பேரு சொல்லி இருக்காங்க, மதம் என்பது மனிதனை அழிக்க வந்த ஒரு பெரிய ஆயுதம் என்று. அது உண்மை என்று புரிந்து கொண்டேன். ஆனால், மதம் எப்படி வந்தது என்று இன்னும் எனக்குத் தெரியாமல்தான் உள்ளது!

எனக்குத் தெரிந்த மதம் இதுதான்.

மத மாற்றம் பற்றி, எவ்வளவோ பேர் எழுதி இருக்காங்க. ஆனால், இது முழுக்க முழுக்க என்னுடைய சிந்தனைகள், யாரும் வருத்தத்படுவதற்காக நான் இதை எழுதவில்லை.

மதம் மாறுபவன் மனிதனே இல்லை என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. சற்றே உற்று நோக்கினால், உண்மையில் என்ன நடக்கின்றது என்று விளங்கும்.

மதம் மாறவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. மற்றவர்கள் மதம் மாறக்கூடாது என்று அதிகமானோர் நினைக்கின்றனர். காரணம் அவர்கள் சார்ந்துள்ள மதம், அதனால் அவர்களுக்கு பிடித்துள்ள மதம்!

சரி, யார் யார் மதம் மாறுகின்றார்கள்? மிகவும் வறுமையில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில், நான் சென்று உனக்கு 3 வேளை பிரியாணி மற்றும் அடுத்த 2 மாதங்களுக்கு சாப்பாட்டுக்குப் பணம் என்றால், என்ன சொன்னாலும் செய்வார்கள்.

அதுதான் நடக்கின்றது. நான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுகின்றேன்.

திருச்சியில், என் வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த ஒருவருக்கு ரேஷன் கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அதற்குப் பணம் தேவைப் பட்டது. யாரும் கொடுத்து உதவ முன்வரவில்லை.

அந்த வேளையில், ஒரு சிலர், செல்வராஜுக்கு அவர்களது மதத்தைப் பற்றியும், மாறினால் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துக்கூறி, செல்வராஜுவை அந்த மதத்துக்கு மாற்றிவிட்டனர். பணமும் கொடுத்து, ஒரு சலவை செய்யும் எந்திரமும் வாங்கி கொடுத்துள்ளனர்.

அவர் அதிகாரபூர்வமாக மதம் மாறியதன் விளைவு, அவருக்கு அரசாங்க வேலை இல்லை (இட ஒதுக்கீட்டின்படி). ஆனால், தற்போது, அவர் அந்த கடையை வைத்து பிழைப்பை நடத்துகின்றார்.

இந்நிலையில் நான் கேட்பதெல்லாம், அவர் செய்தது சரியா, தவறா?

இந்த நிகழ்வில் என்ன தவறு உள்ளது?

மதம் மாறக்கூடாது என்று சொல்லும் ஒரு சாரார், அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன செய்கிறார்கள்?

இன்னும் மக்களை அடிமைகளாக வைத்து, அவன் சாகும்வரை, இரத்தத்தை உறிஞ்ச நினைக்கின்றார்களே தவிற, மற்றது ஒன்றும் இல்லை.

சரி, மதம் மாறிய பின்பு, அவன் என்ன உடை உடுத்தினால் என்ன? அல்லது என்ன உணவு உண்டால்தான் என்ன?

கொலை, கொள்ளை இன்றி, யாரையும் ஏமாற்றாமல் இருந்தால் அவன் எந்த மதத்திற்கு மாறினால் என்ன?

சரி, இவுங்கள ரொம்ப நல்லவங்களாவே சொல்லிகிட்டு இருந்தா எப்படி?

இவங்களுக்கெல்லாம் ஒரே கேள்விதான்.

எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாவது, ஒரு பிச்சைக்காரனை, மதம் மாற்றியிருக்கின்றார்களா??