ஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.
சற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
இதுதான் நடந்தது...
ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,
1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்
2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்
3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்
4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்
5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்
6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.
7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்
8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.
9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.
10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.
மேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.
அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (http://tnpsc.gov.in/recruitment.htm) இதற்கான அறிவிப்பு இருக்கும்.
மேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்!